Pages

Sunday 26 May 2013

My Article on FLEXI SIP in Today's Naanayam Vikatan Issue

Dear All,

This is my article on Flexi SIP, please have a look and send your feedback if any.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் எஸ்.ஐ.பி. (Systematic Investment Plan) என்பது பலருக்கும் தெரிந்த பிரபலமான முதலீட்டு முறைதான். ஆனால், இப்போது புதிதாக ஃப்ளெக்ஸி எஸ்.ஐ.பி. என இன்னொரு முதலீட்டு முறை வந்திருக்கிறது. அது என்ன ஃப்ளெக்ஸி எஸ்.ஐ.பி.?

ஃப்ளெக்ஸி எஸ்.ஐ.பி.!

எஸ்.ஐ.பி. என்பது ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் முதலீடு செய்வதாகும். இது சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது. சந்தை ஏறினாலும் இறங்கினாலும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்வோம்.
ஃப்ளெக்ஸி எஸ்.ஐ.பி. என்பது இதிலிருந்து சற்று மாறுபட்டது. இந்த முறையில் வழக்கமாக நாம் முதலீடு செய்யும் பணத்தைப்போல மூன்று மடங்கு பணத்தை நம் வங்கிக் கணக்கில் வைத்திருக்கவேண்டும். உதாரணமாக, நம்முடைய முதல் மாத என்.ஏ.வி. 12 ரூபாய்  என்று வைத்துக்கொள்வோம் (எஸ்.ஐ.பி. தொகை ரூ.2,000). முதல் மாதம் இந்தப் பணம் நமது வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அடுத்த மாதம் சந்தை கீழே இறங்கி என்.ஏ.வி. 11 ரூபாயானால் எஸ்.ஐ.பி. தேதியன்று 2,000-க்குப் பதிலாக 2,500 அல்லது 3,000 ரூபாயாக எடுத்துக் கொள்ளப்படும். இப்படி அதிகபட்சமாக 6,000 வரை நம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம். இதன்மூலம் சந்தை கீழிறங்கும்போது நாம் நிறைய யூனிட்களை வாங்க முடியும். ஆனால், சந்தை மேலே சென்றால் 2,000 ரூபாய்க்கு மட்டுமே யூனிட் வாங்கப்படும்.
இது சாதாரண எஸ்.ஐ.பி. முறையைவிட மிகவும் பயனுள்ளது என்றாலும், இதில் ஒரு பிரச்னை உள்ளது. எஸ்.ஐ.பி.க்கான பணத்தைகூட இப்போது சிலர் வங்கிக் கணக்கில் சரிவர வைப்பதில்லை என்கிறபோது, இந்த முறையில் எத்தனைபேரால் தங்களது வங்கிக் கணக்கில் 6,000 ரூபாய் வைத்திருக்க முடியும் என்பது சந்தேகமே.
ஃப்ளெக்ஸி எஸ்.ஐ.பி. என்பது அனைவருக் குமான முதலீட்டு முறை அல்ல. ஓரளவுக்கு நிறைய பணம் உள்ளவர்கள் மற்றும் பணத்தைப் பெருக்க வேண்டும் என்ற முனைப்போடு இருப்பவர்களுக்கு மட்டுமே இது சரிப்பட்டு வரும். இப்படிப்பட்ட முதலீட்டாளர்கள்தான் அவருடைய வங்கிக் கணக்கை ரெகுலராக செக் செய்து, அதை சரிவர இருக்கிற மாதிரி பார்த்துக் கொள்வார்கள்.
ஃப்ளெக்ஸி எஸ்.ஐ.பி. மட்டுமின்றி, ஃப்ளெக்ஸி எஸ்.டி.பி., பவர் கோல்ஸ் போன்ற திட்டங்களும் உண்டு. அவற்றைப் பற்றியும் சொல்லி விடுகிறேன்.

ஃப்ளெக்ஸி எஸ்.டி.பி.!

மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருக்க முடியாதவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை லிக்விட் ஃபண்டில் போட்டுவிடலாம். இது மாதாமாதம் முதலீடு செய்யும் தொகையைவிட  ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். ஈக்விட்டி ஃபண்ட் முதலீட்டுக்குத் தேவையான பணம் வேண்டு மெனில் இந்த லிக்விட் ஃபண்டில் இருந்து பணம் எடுக்கப்படும். சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப ஒரு மடங்கு முதல் மூன்று மடங்கு வரை இப்படி எடுக்கப்படும்.
இந்த முறையில் நமக்கு பல சௌகரியங்கள் இருக்கிறது. கையில் பணமில்லையே என்று நினைத்து, முதலீடு செய்யாமல் இருக்கத் தேவையில்லை. காரணம், ஏற்கெனவே லிக்விட் ஃபண்டில் பணத்தைப் போட்டுவிட்டதால் அதிலிருந்து முதலீட்டுக்கான பணத்தை ஃபண்ட் மேனேஜர்கள் எடுத்துக்கொள்வார்கள். தவிர, நம் பணம் லிக்விட் ஃபண்டில் இருக்கும்போது 7 முதல் 8% வரை வருமானம் கிடைக்கும். மேலும், சந்தையின் போக்கிற்கு ஏற்ப பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். அந்தப் பணம் தீருவதற்கு முன்பு மீண்டும் நாம் டாப்அப் செய்யவேண்டும். இப்படி செய்தால், நமக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.
ஃப்ளெக்ஸி எஸ்.ஐ.பி. முறையைவிட ஃப்ளெக்ஸி எஸ்.டி.பி. முறையைப் பலரும் தேர்வு செய்திருக்கிறார்கள். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருப்பதை விட நான்கு மாதத்திற்கு ஒருமுறை டாப்அப் செய்வது பலருக்கும் எளிதாக உள்ளது.

பவர் கோல்ஸ்!

இது முற்றிலும் புதிய திட்டமாகும். ஃப்ளெக்ஸி எஸ்.டி.பி. போல, அதிகப் பணத்தை நம் வங்கிக் கணக்கில் அல்லது லிக்விட் ஃபண்டில் வைத்திருக்கத் தேவையில்லை. மாறாக, நம் மாதாந்திர எஸ்.ஐ.பி. பணம் முதலில் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்ட் என்று சொல்லக் கூடிய லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்யப் படுகிறது. உதாரணமாக, நம் எஸ்.ஐ.பி. முதலீடு 2,000 ரூபாய் என்று எடுத்துக்கொண்டால், இந்தப் பணம் ஃப்ளோட்டிங் ரேட் ஃபண்டிலிருந்து ஈக்விட்டி ஃபண்ட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் (லிக்விட் ப்ளஸ்) என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. இது சென்செக்ஸ் பி.இ. லெவலைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.
20 நாட்கள் மூவிங் ஆவரேஜை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் முதல் தேதி இந்தப் பணம் ஈக்விட்டி மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் பாண்டு ஃபண்டுக்கு பிரிக்கப்படுகிறது. முதல் தேதி வரை அந்தப் பணம் லிக்விட் ஃபண்டில் இருப்பதால்  7 முதல் 8% வருமானம் கிடைக்கிறது. அவ்வாறு பிரிக்கப்பட்ட பணம் அடுத்த மாதத்தில் இருந்து டெப்ட் ஃபண்டுக்கும் ஈக்விட்டி ஃபண்டுக்கும் பி.இ. மாறுதல்களுக்கும் (PE Variation) ஏற்றபடி பிரிக்கப்பட்டு, முதலீடு செய்யப்படுகிறது. இது முழுக்க முழுக்க கம்ப்யூட்டர்களின் மூலம் செய்யப்படுவதால், ஃபண்ட் மேனேஜர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு மற்றும் உணர்ச்சிகளுக்கு வேலை இல்லை.
நடைமுறையில் உள்ளவற்றில் டெப்ட் ஃபண்டுகளில் உள்ள பணம் ஈக்விட்டிக்குச் செல்லும். ஆனால், சந்தை கீழே விழுந்தால் அந்தப் பணம் ஈக்விட்டியில் இருப்பதால் அசல் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால், சந்தை கீழே இறங்கும்போது பணம் டெப்ட் ஃபண்டுக்கும், மேலே ஏறும்போது ஈக்விட்டி ஃபண்டுக்கும் அதிகம் செல்வதால் நல்ல வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. இந்த முதலீட்டு முறை பிரெமரிக்கா(Pramerica) மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் நடத்தும் திட்டத்தில் மட்டுமே உள்ளது.
இது மொத்தமாகச் செய்யப்படும் முதலீட்டுக்கும் பொருந்தும். இதில் வழக்கமான நடைமுறையைவிட ரிஸ்க் குறைவு. ஏனெனில், இது சந்தையின் போக்கிற்கேற்ப மிகவும் ஆக்டிவ்-ஆக செயல்படுகிறது. பொதுவாக சந்தை வேகமாக ஏறும்போது இதுபோன்ற திட்டங்களில் அதிக அளவில் வருமானம் வருவதில்லை. அதுவே, சந்தை விழும்போது மற்ற திட்டங்கள் நெகட்டிவ் வருமானம் கொடுக்கும்போது இத்திட்டங்களில் பாசிட்டிவ் வருமானம் கிடைக்கும்.
இந்தப் புதிய முதலீட்டு முறைகள் உங்களுடைய நிதித் திட்டமிடலுக்கு ஏற்றதா என்பதை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து ஆராய்ந்து முடிவு செய்யுங்கள்!




Friday 17 May 2013

My Article Appeared In this Week Naanayam Vikatan COVER STORY (12th May 2013)

நான்கு பெண்கள், நாலுவித பட்ஜெட்...
செ.கார்த்திகேயன்,
கவர் ஸ்டோரி
நிதி நிர்வாகம் செய்வதில், அதிலும் முக்கியமாக குடும்பத்துக்கான வரவு-செலவுகளைச் செய்வதில் நம் பெண்கள் படுபுத்திசாலிகள். வருமானம் எவ்வளவாக இருந்தாலும், அதற்குள் குடும்பச் செலவை சிக்கென முடிக்கும் திறமை அவர்களுக்கு நிறையவே உண்டு. செலவைக் குறைப்பதோடு, சிறுவாடு மாதிரி சின்னச் சின்னதாக பணம் சேர்த்து, வீட்டுச் செலவுக்கு திடீரென பணம் தேவைப்படும்போது தந்துஉதவி ஆச்சரியப்பட வைக்கும் பெண்களை பல வீடுகளில் பார்க்க முடியும்.
என்றாலும், இன்றைக்கு வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கைப் பெருகிவிட்டது. வருமானம் உயர்ந்திருப்பதால், செலவு செய்யும் மனப்பாங்கும் அதிகரித்திருக்கிறது. இன்றைக்கு பல வீடுகளில் பெண்கள் எப்படி பட்ஜெட் போடுகிறார்கள்?, எந்த மாதிரியான விஷயங்களுக்கு அவர்கள் முன்னுரிமை தருகிறார்கள்?, அவர்கள் செய்வதில் எது சரி?, எந்தெந்த விஷயங்களை இன்னும் சரியாகச் செய்யலாம் என்பதை ஆராய தமிழகத்தின் பல நகரங்களில் இருக்கும் குடும்பத் தலைவிகளிடம் அவர்களின் ஃபேமிலி பட்ஜெட்டைக் கேட்டோம். ஒளிவுமறைவு இல்லாமல் தங்கள் பட்ஜெட்களை நம்மிடம் எடுத்துக் கொடுத்தார்கள்.
அப்படி கிடைத்த பட்ஜெட்களில் நான்கு பட்ஜெட்களை மட்டும் தேர்வு செய்து, அதை நிதி ஆலோசகர் பி.பத்மநாபனிடம் தந்தோம். இந்த பட்ஜெட்களில் உள்ள நிறை - குறைகளை ஆராய்ந்த அவர், குறைகளைக் களையும் வழிகளை எடுத்துச் சொன்னார். குடும்ப பட்ஜெட் போடும்போது கவனிக்கவேண்டிய சில பொதுவான விஷயங்களை அவர் முதலில் சொன்னார்.
''ஒவ்வொரு குடும்பமும் முதலில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கு  ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியையும், குடும்பத் தலைவர் பேரில் ஒரு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியையும் கட்டாயம் எடுத்தாகவேண்டும். இதற்கான பணத்தை மாதா மாதம் ஒதுக்கி வைத்துவிடுவது நல்லது.
அடுத்து, வேலை இழப்பு அல்லது எதிர்பாராத திடீர் செலவு போன்றவற்றை சமாளிக்க 'எமர்ஜென்ஸி மணி’ கட்டாயம் இருக்கவேண்டும். குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை, அல்லது ஆறு மாத காலத்துக்கு குடும்பம் நிம்மதியாக நடக்கத் தேவையான பணத்தைச் சேர்க்க மாதா மாதம் கொஞ்சம் ஒதுக்கிவிடுவது அவசியம்.
இதற்கடுத்து, உங்கள் எதிர்காலத் தேவைகளை சரியாக கணித்து, அதற்கான முதலீட்டை இப்போதே தொடங்குவது நல்லது. சொந்த வீடு, குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம், ஓய்வுக்காலத்துக்கு தேவையான பணத்தைச் சேர்ப்பது உள்பட உங்களது எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சரியான வழிகளில் முதலீடு செய்யவேண்டும்.
குடும்பச் செலவை சரியாகச் செய்யும் நம் பெண்கள், முதலீடு என்று வரும்போது ரிஸ்க் மிகுந்த வழிகளைத் தேர்வு செய்து விடுகிறார்கள். உதாரணமாக, அரசிடம் பதிவு செய்யப்படாத அமைப்புகளில் சீட்டு சேருவது. சரியான முதலீட்டு வழிகள் இருக்க, ரிஸ்க் மிகுந்த வழிகளைத் தேர்வு செய்வானேன்?
இந்த பட்ஜெட்களை ஆராய்ந்து குடும்ப நிதி நிர்வாகத்திற்கு மார்க் கிரேடு தந்திருக்கிறேன். இந்த மார்க்கை எந்த அடிப்படையில் தந்திருக்கிறேன் என்பதை மேலே உள்ள அட்டவணையில் சொல்லி இருக்கிறேன்'' என்றபடி, வாசகர்களின் பட்ஜெட்களுக்குள் நுழைந்தார்.