Pages

Monday 26 May 2014

My 34th Article In the Hindu Tamil today 26th May 2014 about "Risk and Returns"

ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் -- பா. பத்மநாபன்


இன்று ரிஸ்க்கைப் பற்றி பலர் கவலைப்படுவதில்லை. முதலீட்டில் கிடைக்கும் ரிடர்ன்ஸ், பெரும்பாலும் ஒருவர் எடுக்கக்கூடிய ரிஸ்க்கைச் சார்ந்ததே.

​முதலீடு என்றவுடன் எல்லோ ருக்கும் மனதில் உள்ளவை, வைப்பு நிதி வங்கி மற்றும் போஸ்ட் ஆபீசில், தங்கம், ரியல் எஸ்டேட், லைப் இன்சூரன்ஸ், சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட் முதலீடுகள். இதில் என்ன ரிஸ்க் உள்ளது, நாம் அதை எவ்வாறு புரிந்து கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம்.

வைப்பு நிதி: நம் முதலீடு பாதுகாப்பானது, வட்டி விகிதம் மாறக்கூடியது, நம் பணம் முதிர்வு பெற்ற பின்பு, எந்த வங்கியில் திரும்ப முதலீடு செய்ய வாய்ப்பு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. அதில் போடும் பணத்திற்கு வருமான வரி விலக்கு கிடையாது. நடுவில் எடுத்தால் 1% வரை நம் முதலீட்டில் கொடுக்க வேண்டி வரும்.

ரிஸ்க்: குறுகிய முதலீடு நல்லது. 3 வருடம், 5 வருடம் மற்றும் அதற்கும் மேல் என்று வைத்திருப்பது அதிகம் ரிஸ்க்.தங்கம்: இந்தியாவில் எல்லோராலும் குறிப்பாக அனைத்துப் பெண்களாலும் விரும்பப் படுகிறது. கடந்த 5 வருடங்களில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

தங்கம்: இந்தியாவில் எல்லோராலும் குறிப்பாக அனைத்துப் பெண்களாலும் விரும்பப் படுகிறது. கடந்த 5 வருடங்களில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

ரிஸ்க்: இவ்வளவு காலம் நம்முடைய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தது. இப்போது ஒரு டாலரின் மதிப்பு 59 ரூபாய். இன்னும் குறையும் என்று சொல்லப்படுகிறது. தங்கத்தில் வேறு டிசைன் மாற்றும்போது நமக்கு 20% வரை இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஒரு கடையில் வாங்கும் தங்கத்தை மற்றவர்கள் அதே விலைக்கு வாங்கிக் கொள்வதில்லை; அப்படி என்றால் எல்லா தங்கமும் ஒரே தரத்தில் இல்லை என்றுதானே பொருள். எல்லாம் ஒரே தரமாக இருந்தால் எப்படி சில கடையில் தங்கத்தின் விலையை விடக் குறைவாகத் தரமுடியும்? சற்றே சிந்திக்க வேண்டிய விஷயம்.

லைப் இன்சூரன்ஸ்: சம்பாதிக்கும் ஒரு குடும்பத் தலைவர் இறந்தால் ஏற்படும் பொருளாதார இழப்பை நாம் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மாற்றிவிட்டால் நம்முடைய குடும்பம் பாதுகாப்பாக இருக்கும். இன்சூரன்ஸில் எந்த ஒரு திட்டமும் 3 வருடமோ அல்லது 5 வருடமோ கிடையாது. பெரும்பாலும் 20 வருடமும் அதற்கும் மேல்.

ரிஸ்க்: இதை நடுவில் நிறுத்தினால் நிறைய இழப்பு ஏற்படும். முகவர் ஒரு பாலிசியைப் பற்றி என்ன சொன்னாலும், அந்த பாலிசி நம் கைக்கு வந்த பின்பு, அதை நாம் பார்த்தால் இதைப் புரிந்து கொள்ள முடியும். உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால் தெரிந்தவரை அணுகலாம். இது முடியாவிட்டால் நீங்கள் அதை வாங்க வேண்டிய அவசியமில்லை. எண்டோவ்மென்ட் மற்றும் மணி பேக் பாலிசி 20 வருட முடிவில் 6% மேல் நமக்கு வட்டி கிடைக்காது.

பங்குச் சந்தை சார்ந்த முதலீ ட்டுத் திட்டமான யுலிப் 5 வருடம் ஆகியும் போட்ட பணம் இல்லை என்று பங்கு சந்தையை பழி சொல்கிறார்கள். இதில் அவர்களுடைய பிரீமியத்தில் எத்தனை பணம் முதலீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, அது எல்லாமே ஈக்விட்டி சார்ந்ததா அல்லது கடன் சார்ந்த திட்டமா என்பதைப் பொறுத்ததே.

பங்குச் சந்தை மற்றும் மியுச்சுவல் பண்ட்: இது வர்த்தகம். தினசரி வாங்கியும் விற்றும் ஒவ்வொருவருடைய மனநிலைக்கேற்ப செயல்படு கிறார்கள்.பெரும்பாலும் ஏதாவது ஒரு செய்தியின் அடிப்படையில் அவர்கள் முடிவெடுப்பதால் நிறைய பேர் பணத்தை இழக்கிறார்கள். சிறந்த நிறுவனத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குபவர்கள் பணத்தை இழப்பதில்லை. இதற்கு நேரமும், அதைப்பற்றிய புரிதலும் மிக அவசியம்.

ரிஸ்க்: நிறைய பேர் இதில் எளிதில் பணம் பண்ண முடியும் என்ற தவறான கண்ணோட்டத்தில் வருகிறார்கள். மிக விரைவாக பணம் பண்ணுவதற்கும், இழப்பதற்குமான டெரிவேடிவ் வேஸ் முறையைக் கையாள்வது. இதில் உங்களிடம் 5 ரூபாய் இருந்தால் நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்க முடியும். ஒரு பங்கு குறைந்தால் அது அதே விலை வரும்வரை காத்திருப்பது. அதே சமயம் அது உயர்ந்தால் உடனே அதை விற்றுவிடுவது. 

நம்முடைய தேவை போக மீதமுள்ள பணம் மேலும் நீண்ட கால அடிப்படையில் மட்டுமே அது பிறகு தேவைப்படக்கூடியது என்றால் அதில் முதலீடு செய்ய வேண்டும். பலர் தங்களுடைய எல்லா சேமிப்பையும் அதில் போட்டு குறைந்த கால அளவோடு வந்தால் பணத்தைக் கண்டிப்பாக இழக்க வேண்டியிருக்கும். இதில் ரிஸ்க், நம்முடைய அணுகு முறை மற்றும் அதைப் பற்றிய நம்முடைய புரிதல் மிகவும் முக்கியம்.

ரியல் எஸ்டேட்: மண்ணில் பணத்தைப் போட்டால் எப்போதுமே லாபம்தான். கடந்த 10 வருட வளர்ச்சியினைப் பார்த்து எல்லா பணத்தையும் அதில் முடக்குகிறார்கள். எல்லா வங்கியும் வீடு தேடி வந்து கடன் தருகிறார்கள். இதற்கு ஒரு நிரந்தர விலை கிடையாது.

ரிஸ்க்: கடன் வாங்கி முதலீடு செய்யக் கூடாது என்பது முதலீட்டின் பால பாடம். இங்கு நாம் வங்கியில் கடன் வாங்கி முதலீடு செய்த வீடு, நாம் கட்டக்கூடிய வட்டியைத் தாண்டி பெருக வேண்டும். ஒரு சிந்தனை! ஒரு வங்கி நமக்குக் கடன் கொடுத்து, வெறும் வட்டியை மட்டும் வாங்கிப் பயன் பெறுவதைவிட அந்த வங்கியே அதை வாங்கினால் அவர்களால் குறைந்த அளவுக்கு வாங்க முடியும், ஏன் அவர்கள் செய்வதில்லை என்றால் இன்று நல்ல வளர்ச்சியில் உள்ள ரியல் எஸ்டேட் நாளை அதே மாதிரி வளராவிட்டால் அவர்களுக்கு நஷ்டம் என்று கடன் தருகிறார்கள். இன்று மும்பை, சென்னை, போன்ற பெரு நகரங்களில் 40 மாதத்திற்கான அளவுக்கு வீடு விற்பனைக்கு உள்ளது.

அத்துடன் புதிது புதிதாக பூமி பூஜை போட்ட வண்ணம் இருக்கிறார்கள். நிறைய சப்ளை, குறைந்த டிமான்ட் இருந்தால் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். கடன் வாங்கி தேவைக்கு மீறி இதில் முதலீடு செய்து கொண்டே இருந்தால் விரைவில் மாட்டிக் கொள்ளவேண்டும்.

சாராம்சம்: ஒரு முதலீட்டைத் தேர்வு செய்வதற்கு முன்பு கொஞ்சம் நேரம் செலவிட்டு அதனுடைய ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் தெரிந்து கொண்டால் யாரையும் பிறகு குறை கூறத் தேவையில்லை. ரிஸ்க்கை புரிந்து கொண்டு முதலீட்டைத் தேர்வு செய்தால் கண்டிப்பாக நம்மால் பணம் செய்ய முடியும்.
padmanaban@fortuneplanners.com

Monday 19 May 2014

My 33rd Article In the Hindu Tamil dated 19th May 2014, about, Stock Market is Boon or Bane...

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகள் வரமா, சாபமா? - பா. பத்மநாபன்

 

இன்று பலருக்கு பங்குச் சந்தை என்றால் அது ஒரு சூதாட்டம், அதில் நாம் எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. அப்படி பலர் நினைப்பது போல அது உண்மையானால் எப்படி ஒரு அரசாங்கமே அதை எடுத்து நடத்தும்? மேலும் பங்குச் சந்தை எல்லா நாட்டிலும் உள்ளது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பது பங்குச் சந்தை என்று கூறினால் அது மிகவும் பொருத்தமாக இருக்கும். எனவே அதைப் பற்றித் தவறாகப் பேசமால் அது எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்தோமேயானால் நம்மால் அதைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியும்.

பங்குச் சந்தை என்பது ரிஸ்க் சம்பந்தப்பட்ட முதலீடு அதில் முதலீடு செய்வதற்குமுன், அதில் என்ன ரிஸ்க் உள்ளது என்று அறிந்து கொள்ளாமல் மற்றவர் சொல்வதைக் கேட்டு அதிலிறங்கி பின்பு குறை கூறுவது தவறான செயல்.

முதலீட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்
1. பாதுகாப்பான முதலீடு, இதில் அதிகபட்சமாக 10% ரிடர்ன் எதிர்பார்க்கலாம். இது பெரும்பாலும் உத்திரவாதமாகக் கிடைக்கக் கூடியது.
2. ரிஸ்கான முதலீட்டில் 15 முதல் 20% நீண்ட கால அடிப்படையில் கிடைப்பதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன, ஆனால் உத்திரவாதம் கிடையாது.

பலர் 25% உத்திரவாதம் தருவதாகச் சொன்னால் நம்பக்கூடாது. ஒரு அரசாங்கத்தால் 10%-க்கு மேல் உத்திரவாதம் தராதபோது எப்படி சில முதலீட்டுத் திட்டங்கள் 25 முதல் 40% வரை உத்திரவாதமாக தர முடியும். இங்கு நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நம்முடைய பேராசையே இதற்குக் காரணம். அதனால் ஏமாற்றுபவர்களும் விதவிதமாய் ஏமாற்றுகிறார்கள். நம்மில் பலருக்கு சீக்கிரம் பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருப்பதால் தான் இது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கிறது.

பங்குச் சந்தை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டது, அதை தினசரி வாங்கி விற்றால் நம்மால் பணம் ஈட்ட முடியாது, ஆனால் நேரத்தைப் போக்க முடியும். இன்று ஓய்வு பெற்ற பலர் தினசரி வேலைக்கு செல்வதைப் போல பங்குச் சந்தை வர்த்தகம் நடக்கக் கூடிய முகவர்களின் அலுவலகம் சென்று, வாங்கியும் விற்றும் நேரத்தைப் போக்குவதோடு பணத்தையும் வீணடிக்கிறார்கள். நம் நாட்டில் மக்கள் தொகைக்குப் பஞ்சமில்லை, இதில் பணத்தை விட்டவர்கள் மீண்டும் வரமாட்டார்கள், அதேசமயம் புதியவர்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள். மேலும் டீமேட் கணக்கு தொடங்குவது முதல் வருடம் இலவசம், நாம் எந்தப் பணமும் செலுத்த வேண்டாம் என்று சொன்னால் பலரும் புதிய கணக்கைத் தொடங்கி விடுவார்கள்.

முதலில் பங்குச் சந்தையில் நுழைபவர்களுக்கு சந்தை சாதகமாகவே இருக்கும். இவ்வளவு எளிதாகப் பணம் பண்ணக்கூடிய வாய்ப்பு இருக்கும் போது நாம் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோமே என்ற எண்ணம் வரும், அந்த எண்ணம் நம்முடைய எல்லா பணத்தையும் திரட்டி அதில் முதலீடு செய்யத் தோன்றும். அவ்வாறு இறங்கும்போது எல்லா பணத்தையும் இழக்க வேண்டியதுதான்.

அதே சமயம் நல்ல நிறுவனத்தின் பங்கை வாங்கியவர்கள் அதை நீண்ட கால நோக்கில் வைத்திருப்பவர்கள் நல்ல லாபமே சம்பாதித்திருக்கிறார்கள். ஒரு நிறுவனத்தின் நிறுவனருக்கே அந்தப் பங்கு நாளை என்ன விலை போகும் என்று தெரியாத போது நீங்களும் நானும் அது இந்த அளவுக்குப் போகும் என்று நினைத்து தினசரி வாங்குவதும், விற்பதும் தவறு. அவர்களின் பேச்சிலிருந்து அவர்கள் தங்களுடைய நிறுவனத்தைப் பெரிதாக்க என்ன திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் அதற்கு சந்தையில் என்ன வரவேற்பு இருக்கிறது போன்ற விஷயங்களை அறிந்து செயல்பட்டோமேயானால் நம்மால் கண்டிப்பாக பணம் பண்ண முடியும்.

இன்று பலருடைய டயாலாக் என்னுடைய தந்தை பங்குச் சந்தையில் எல்லாவற்றையும் இழந்துவிட்டார், இன்னும் சில சொந்தங்களும் அதை இழந்து விட்டன என்று சொல்லி அதிலிருந்து விலகுவதைவிட, அவர்கள் அதைப் பற்றி என்ன அறிந்திருந்தார்கள், அந்த காலகட்டத்தில் இன்று இருப்பதுபோல எல்லா விபரங்களும் வெளிப்படையாக இருந்ததா? மேலும் ஒரு நிறுவனத்தைப் பற்றி எந்த அளவிற்கு ஒருவரால் தெரிந்து கொள்ள முடிந்தது என்று பார்க்கவேண்டும். இதில் குடும்பத்தில் ஒருவர் வெற்றி பெற்றார் என்றால் எல்லோரும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனவே இது ஒரு தனி நபரின் புரிதலைச் சார்ந்தது.

எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் வருமான வரிபோக நம் கைக்கு என்ன கிடைக்கிறது என்று பார்க்கவேண்டும். வருமான வரி பாதுகாப்பான முதலீட்டிற்கு அதிகம், ரிஸ்க் சார்ந்த முதலீட்டிற்குக் கிடையாது. அரசாங்கமே மறைமுகமாகப் பங்கு சார்ந்த முதலீட்டை வரவேற்கிறது என்று இதிலிருந்து அறிந்து கொள்ள முடியும். இன்று 30% வருமான வரி விளிம்பில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு 10% வட்டி கிடைப்பதாய் எடுத்துக் கொண்டால் 7% தான் வருமான வரி போக கைக்கு வரும். இந்த வகையான சலுகை பங்குச் சந்தை சார்ந்த முதலீட்டிற்கு மட்டுமே பொருந்தும்.

இன்று மும்பை பங்கு சந்தை (SENSEX) தொடங்கி ஏறக்குறைய 35 வருடங்கள். 100ல் ஆரம்பித்த சென்செக்ஸ் புள்ளிகள் இன்று 24,000 புள்ளிகளைத் தொட்டிருக்கிறது. கூட்டு வட்டியில் கணக்கிட்டால் இது வருடா வருடம் 17%. புதிய புதிய கண்டு பிடிப்புகளும் அதனால் உருவாகும் தொழில்களும் வந்த வண்ணம் இருக்கிறது கன்சூமரிசம் என்று சொல்லிற்கேற்ப, ஒருவருடைய செலவு செய்யும் மனப்பான்மை மேலை நாடுகளைப்போல நம்மிடம் மிக வேகமாக பரவி வருகிறது. இனிவரும் காலங்களிலும் 17% கூட்டு வட்டியுடன் நம் சந்தை வளருவதற்கான வாய்ப்புகளே அதிகம். மேலும் மத்தியில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு வலுவான ஆட்சி அமைந்துள்ளது. இது பங்குச் சந்தையின் வளர்ச்சிக்குக் கண்டிப்பாக உறுதுணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது.

ஒரு நாட்டின் பொருளாதாரம் முன்னேற வேண்டுமானால், தொழில் தொடங்குபவர்களுக்குப் பணம் வேண்டும். ஆனால் இன்று பெரும்பாலோர் பாதுகாப்பு எனக் கருதி வைப்பு நிதியில் வைத்தால் எப்படி அந்த பணம் தொழிலில் முன்னேற துடிப்பவர்களுக்கு போய்ச்சேரும். முன்னேறிய நாடுகளை எடுத்துக் கொண்டால் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை 50% சதவிகிதத்திற்கும் மேல் இந்தியாவில் இன்னும் 5% மக்கள் கூட பங்கேற்கவில்லை. இந்நிலை வரும் காலங்களில் கண்டிப்பாக மாறும், இன்று மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு உள்ளது, அது மக்களைத் தெளிவான பங்குச் சந்தை பற்றிய அறிவுடன் மேலும் இந்த முதலீட்டில் சேர்க்கும் என்பது உறுதி.

சாராம்சம்:
இந்தக் கட்டுரையின் நோக்கமே, எந்த ஒன்றையும் மேலோட்டமாகப் புரிந்து அதை புறக்கணிப்பதைவிட, கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் நம்மால் அதில் வெல்ல முடியும். எல்லோரும் கண்டிப்பாகப் பங்குச் சந்தையில் பங்கேற்கவேண்டும் என்று அழைக்கவில்லை, அதே சமயம் இதில் வருபவர்கள் அதனுடைய நீக்கு போக்கு தெரிந்தால் கண்டிப்பாகப் பணம் பண்ணுவதைத் தவிர இழப்பதற்கு ஒன்றும் இல்லை. மேலும் உங்களுக்கு இதில் நேரம் செலவிட முடியும் என்றால் மட்டுமே வரவும், அதை விடுத்து அடுத்தவர் சொன்னார் என்று வந்து பின்பு அவரைக்குறை கூறுவதைத்தவிர்க்கவும்.

எனக்கு ஓரளவிற்குப் புரிகிறது அதே சமயம் எனக்கு நேரம் ஒதுக்க முடியாது என நினைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இதில் பங்குச் சந்தையை விட ரிஸ்க் மற்றும் ரிடர்ன்ஸ் குறைவு.

பங்குச் சந்தை என்பது வரமோ அல்லது சாபமோ அது தனி நபரைப் பொருத்தது. இதைப் புரிந்து கொள்பவர்கள் நிறைய பணம் பண்ணுகிறார்கள், அதைப்பற்றி அறியாமால் முதலீடு செய்பவர்கள் அதை ஒரு பாவமாகக் கருதுகிறார்கள். மேலும் கடந்த 6 ஆண்டு காலம் இந்த முதலீட்டு வகை செயல்படாததால் பலர் இதில் முதலீட்டைத் தொடங்குவதற்குத் தயங்குகிறார்கள்.

இன்னும் 5 முதல் 10 வருடம் பங்குச் சந்தை மிகவும் சிறப்பாகச் செயல்படக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. நம்பிக்கையுடன் வாருங்கள்,கண்டிப்பாக பணம் பண்ணலாம்.

Monday 12 May 2014

My 32 Article in the Hindu Tamil dated 12th May 2014 on NEW Pension Scheme


ஓய்வூதியம் அவசியமாவது ஏன்?  பா. பத்மநாபன்



பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்தில் சேர விரும்புவதற்கான முக்கியக் காரணமே ஓய்வூதியம் (பென்ஷன்) என்ற கவர்ச்சிகரமான விஷயமே. நாளுக்கு நாள் கூட்டுக் குடும் பங்கள் சிதைந்து தனி மரமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், ஓய்வூதியம் தனி மனி தனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.
இன்று நாம் ஓய்வூதியத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கான சில காரணங்கள்.

1. ஒருவர் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு, அவர்களால் முன்பு போல பொருள் ஈட்டுவது கடினம்.
2. உதாரணங்கள், நிறைய தனிக் குடித்தனங்கள்! இன்றைய இளைய சமுதாயம் ஒன்றிணைந்து வாழ விரும்புவதில்லை.
3. விலைவாசி உயர்வு கட்டுப் பாடில்லாமல் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
4. மருத்துவ உலகின் வளர்ச்சியினால் ஒருவருடைய ஆயுட் காலம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
5. இளைய சமுதாயம் விரை வில் ஓய்வு பெற விரும்புவதால் அவர்கள் பணியில் இருக்கும் காலத்தை விட ஓய்வுக் காலம் அதிகம். அதனால் பென்ஷன் மிக மிக அவசிமாகிறது.

ஜனவரி 1 2004 முதல் பணி யில் சேரும் மாநில மற்றும் மத்திய அரசாங்க ஊழியர்களுக் குக் கண்டிப்பாக New Pension Scheme எனப்படும் NPS மூலம் தான் ஓய்வூதியம் தரப்படும். மே 1 2009 முதல் அனைத்து இந்திய குடிமக்களும் இதில் பங்கு பெற லாம் என்ற அறிக்கை விடப்பட்டது. பிரிவு-1மற்றும் பிரிவு-2 என்று இரண்டு உட்பிரிவுகள் உள்ளன. பிரிவு-1ல் 60 வயதில்தான் பணத்தை எடுக்கமுடியும். பிரிவு-2ல் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

இதில் இணைபவர்களுக்கு PRAN எண் தரப்படும். ஒருவரின் பேரில் ஒரு திட்டம் மட்டுமே அனு மதிக்கப்படும். நிறுவனம் மாறி னாலோ அல்லது ஊர் மாறினாலோ அருகில் உள்ள அலுவலகத்தை அணுகி பயன் பெற முடியும்.

அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அவர்களு டைய சம்பளத்தில் 10% பிடிக்கப் பட்டு, அரசாங்கமும் 10% அவர்கள் கணக்கில் முதலீடு செய்கிறது. ஒருவர் விரும்பினால் 10% மேலும் இதில் சேர்க்கலாம், ஆனால் அரசாங்கம் 10% மட்டுமே நமக்காக தரும். வயது 18 முதல் 60 வரை. நடுவில் பணம் எடுக்கவோ அல்லது அதில் கடன் வாங்குவதோ முடியாத காரியம்.

பென்ஷன் முதிர்வு தொகையில் 60% வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம். குறைந்தது 40% பென்ஷன் மூலமாக மாதா மாதம் தரப்படும். அந்த 60% பணத்தை ஒருவர் தன்னுடைய 60 வயது முதல் 70 வயதுக்குள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் இறந்து விட்டால் அவருடய நாமினிக்கு பென்ஷன் தொகை அனைத்தும் திருப்பித்தரப்படும்.

தொடர்ந்து அதிகரிக்கும் பண வீக்கத்தினால் பாதுகாப்பான முதலீட்டால் பயன் இல்லை. அதற் காகத்தான் அரசாங்கமே இந்தத் திட்டத்தை பெரிதளவில் விளம் பரப்படுத்துகிறது. இதை நிர்வகிக் கும் செலவு மிக மிகக் குறைவு. அவ்வாறு திரட்டிய பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.

முதலீட்டுவகைகள்
ஈக்விட்டி (அதிகபட்சமாக 50%, குறைந்தது 10%) வைப்பு நிதித் திட்டங்கள் அரசங்கம் சாராதது (அதிகபட்சமாக30%) அரசாங்கக் கடன் பத்திரங்கள் (குறைந்த பட்சமாக 20%, அதிகபட்சமாக 80%).
இந்தத் திட்டத்தில் உள்ள சாதக, பாதகங்களை உணர்ந்தால் ஒருவர் இதில் இணையலாமா வேண்டாமா என்று முடிவெடுத்துக்கொள்ளலாம்.

NPS சாதகங்கள்
1. ஒருவருக்கு சேமிக்கக் கூடிய ஒழுங்கு கட்டுப்பாட்டை ஏற்படுத்தும். எல்லோரும் பென் சனுடைய முக்கியத்துவத்தை உணர்வதால் இந்தத் திட்டத் திலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியே வரமாட்டார்கள்.
2. இதனுடைய NAV தினசரி தெரியாததால், சந்தையின் ஏற்ற இறக்கத்தை பலர் கவனிப்ப தில்லை, ஆனால் இதுவும் சந்தை யின் போக்கிற்கேற்ப ரிடர்ன்ஸ் மாறுபடும்.
3. சுமார் 8 நிறுவனங்கள் நம் முடைய முதலீட்டை நிர்வகிப்ப தால் ஒன்றிலிருந்து மற்றொன் றுக்கு நாம் வருடம் ஒரு முறை எளிதாக மாற முடியும்.
4. நிறைய நிறுவனங்கள் இருப்பதால் நன்றாக செயல்பட வேண்டும் என்ற போட்டி மனப் பான்மை வரும் அது முதலீட்டாள ருக்கு நல்ல பலனையே தரும்.
5. பிரிவு-1ல் குறைந்தது 6000 ருபாய், பிரிவு- 2 ல் குறைந்தது 2000 ரூபாய் சேர்த்தாலே போது மானது. அதைவிடக் குறைவாகச் சேர்த்தால் 100 ரூபாய் அபராதம் கட்டி மீண்டும் தொடரலாம்.
6. சந்தையைப் பற்றி அதிகம் தெரியாதவர்கள் முதலீடு அவர்களுடைய வயதிற்கேற்ப ரிஸ்க் அறிந்து முதலீடு செய்யப்படும். அதற்கு ஆட்டோ அலகேஷன் முறை என்று பெயர்.
7. வருமான வரிப் பிரிவில் பிரிவு 80CCD ல் ஒரு லட்சம் வரை வரிச் சலுகை பெற முடியும். இது சாதாரணமாகக் கிடைக்கும் சலுகையை தவிர்த்து இந்த 1 லட்சம் என்பது ஒரு நல்ல வரவேற்கத்தக்க விஷயம்.

NPS பாதகங்கள்
1. நீண்ட கால முதலீட்டு சந்தை யில் எப்போதுமே நல்ல ரிடர்ன்ஸ் தந்திருக்கிறது. அவ்வாறு இருக்கும்போது 50%க்கு மேல் சந்தையில் முதலீடு கூடாது என்பது, நீண்ட கால ரிடர்ன்சை அதிகம் பாதிக்கும்.
2. வழக்கம்போல அரசாங்கத் தில் நிறைய கெடுபிடி விதிகள், பல இன்றைய கால கட்டத்திற்கு உதவாது.
3. இன்று சந்தையைப் போல கடன் திட்டங்களும் ரிஸ்க் வாய்ந் தவை, அதனால் மீதமுள்ள 50% பாதுகாப்பு என்று எண்ணக்கூடாது.
4. நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த லாம். ஆனால் ஓய்வு பெற்ற பின்பு நாம் வாங்கக்கூடிய பென்ஷன் நமக்குப் போதுமா என்பது கேள்விக்குறியே
5. முதலீடும் சென்செக்ஸ் மற்றும் நிப்டி வகை நிறுவனங் களில் முதலீடு மேற்கொள்வதால் பல சிறந்த நிறுவனங்களில் பங் களிப்பை நாம் தவற விடுகிறோம்.
6. ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் 50% ஈக்விட்டி என்பது மிகக்குறைவு. அதுவும் 35 வயதுவரை 50%. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் 2% குறைந்து கொண்டே வரும்.
7. இதில் ஒவ்வொரு முதலீட்டிற்கும் 0.25% முதலீட்டின் ரூபாய் மதிப்பில் அல்லது 20 ரூபாய், இதில் எது அதிகமோ அது எடுத்துக் கொள்ளப்படும். அதிக பட்சமாக 2500 வரை. எஸ்.ஐ.பி முறை மேற்கொண்டால் மாதம் 1000 சேமித்தால் கூட 25 ரூபாய் எடுத்துக்கொள்ளப்படும். இது மாதாந்திர சேமிப்பை தொடர்பவர்களை நிராகரிப்பதற்குச் சமம்.
இந்தத் திட்டத்தைப் பற்றி நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை. இது அரசாங்கத்தால் நடத்தப்படுவது என்பதற்காகவே பலர் இதில் இணைய விரும்புகிறார்கள். இந்தத் திட்டம் எளிதாக எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நிறைய இடத்தில் ஆலோசனை மையங்கள் வைக்க வேண்டும்.

சாராம்சம்:
உங்களுக்குள் ஒழுங்கு கட்டுப்பாடு இல்லை என்றால் இத்தகைய முதலீட்டை மேற்கொள்ளலாம். அந்த ஒழுங்குக்கு நீங்கள் கொடுக்கும் விலை பல லட்சம் ரூபாய் 30 வருட முடிவில்! தயவு செய்து மனதில் நிறுத்திக்கொள்ளவும்.

கடந்த 10 ஆண்டுகளில் இத்தகைய திட்டத்தின் ரிடர்ன்ஸ் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் அரசாங்க உத்தியோகம் இல்லாதவர்களில் சேர்ந்தவர்கள் வெறும் 2.3 லட்சம் மட்டுமே. இத்திட்டத்திற்கு இதுவரை சரியான வரவேற்பு இல்லை.

பென்ஷன் திட்டம் என்பது நல்ல விஷயம், அரசாங்கம் கொஞ்சம் ப்ராக்டிகலாக சிந்தித்து, மறுபரிசீலனை செய்தால் நிறைய பேர் இணைய வாய்ப்புள்ளது. இந்த க் கட்டுரையில் சில முக்கிய விஷயங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இணைய தளத்தில் விரிவாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். இப்போது இத் திட்டத்தைத் தவிர்ப்பது நல்லது.

பா. பத்மநாபன்- padmanaban@fortuneplanners.com

Sunday 4 May 2014

My 31st Article in the Hindu Tamil today 5th May 2014 about " Pareto Principle or 80:20 Rule"

20 சதவீதத்தவருக்காக உழைக்கும் 80% மக்கள் - பா. பத்மநாபன்

 


இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடொ பரேட்டோ (Vilfredo Pareto) 1906 ம் ஆண்டு கவனித்த ஒரு விஷயம், இத்தாலி நாட்டில் 80% நிலத்தை நிர்வகித்து வந்தது 20% மக்கள் தொகையே. தான் கவனித்த அந்த விஷயத்தை பல நாடுகளிலும் சர்வே செய்தபோது கிடைத்த ஆச்சரியமான உண்மை எல்லா நாடுகளிலும் இதே சதவிகிதம் ஒத்து காணப்பட்டதே.

இந்த விதி பொதுவாக எல்லா இடத்திலும் பொருந்தக்கூடியது. 80 சதவீத மக்கள் 20 சதவீத மக்களுக்காக வேலை செய்கிறார்கள், உலகின் 20 சதவீத பணக்காரர்கள் 80 சதவீத செல்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். இந்த பரேட்டோ விதி நமது அன்றாட வாழ்க்கையிலும் பெரும்பாலான இடங்களில் பொருந்தினாலும் யாரும் அதைப்பற்றி சிந்திப்பதில்லை மேலும் அதை உணர்வதும் இல்லை.

நேரம் விரயமல்ல
நம் வாழ்வில் கூர் செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன, அதற்குச் செலவிடும் நேரத்தை விரயம் என நினைக்காமல் செயல்பட்டால் அந்த 20% நேரம் நமக்கு 80% உழைப்பைத் தரும் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

இங்கே பிரச்சினை என்னவென்றால், பலர் தங்களது வருமானத்தில் 10% கூட தொடர்ச்சியாக சேமிப்பதில்லை. எல்லோராலும் அந்த 20% க்குள் வந்து 80%-ஐ கட்டுப்படுத்த முடியாது, அதே சமயம் எல்லோராலும் 20% சேமிப்பைக் கடைப்பிடிப்பது என்பது அவ்வளவு கடினம் இல்லை. செல்வ வளத்தை உருவாக்குவது குழந்தை விளையாட்டு, நாம் ஒழுங்கை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்தால் வளமாக வாழலாம் என்று சொன்னால் மிகையாகாது.

கீழ்க்கண்ட உதாரணங்களை நம் அன்றாட வாழ்வில் கண்கூடாகக் காண லாம்.
1. ஒரு நிறுவனத்தின் 80% வளர்ச்சிக்கு உறு துனையாக இருப்பவர்கள் 20% வாடிக்கையாளர்களே!
2. ஒரு நிறுவனத்திற்கு வரக்கூடிய 80% புகார் தரக்கூடியவர்கள் 20% வாடிக்கையாளர்களே!
3. உங்களுடைய செலவுகளில் 80% ஆக்கிரமிப்பது ஒரு சில செலவுகளே, அதாவது மாதம் நாம் 50 செலவுகள் செய்கிறோம் என எடுத்துக் கொண்டால், அதில் 10 செலவுகள் 80% பணத்தை சாப்பிட்டு விடும்.
4. வேலைக்குப் போக வேண்டும் என்பது சரி, அதில் 20% மக்களே தங்களுக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுத்து செய்கிறார்கள், 80% ஏதோ கிடைத்த வேலை செய்வதால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
5. எல்லோருக்கும் 20% பிரச்சி னைகளும், 80% சாதகமாகவும் இருக்கும். ஆனால் நம்மில் பலர் அந்த 20% பிரச்சினைகளை பெரிதுபடுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் நமக்குப் பிரச்சினைகள்தான் வளர்ந்து கொண்டே இருக்கிறன்றன. இது கேட் பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும் இது ஒரு நிதர்சனமான உண்மை.

பணக்காரர்களின் ஆதிக்கம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கும் சொல்லான GDP (Gross Domestic Product) 1989 ம் ஆண்டு உலக அளவில் 20% பணக்காரர்களால் 82.7% நிர்வகிக்கப்பட்டது. இதிலிருந்து இந்த விதி எல்லா இடங்களிலும் எல்லா கால கட்டத்திற்கும் பொருந்துவதாய் தோன்றுகிறது. கீழே கொடுக்கப்பட்ட அட்டவணையைப் பார்க்கவும்.

இந்தியாவில் அரசாங்க உத்தியோகத்தில் ஓய்வூதியம் என்பது அவர்களுடைய வருமானத்தில் மாதா மாதம் 10% பிடித்து, 30 முதல் 35 வருடங்களுக்குப் பிறகு அதாவது ஓய்வு பெறும்போது ஒரு தொகையைத் தருகிறார்கள். அந்த சிறு தொகைதான் பெரிதாக வளர்ந்து மீதமுள்ள வாழ்க்கைக்கு உதவுகிறது.

சேமிக்கும் பழக்கம்
ஒருவர் மாதா மாதம் ரூ. 50,000 சம்பாதிப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அதில் 80 சதவீதமான ரூ. 40,000 செலவு செய்துவிட்டு 20 சதவீதமான ரூ. 10,000 சேமிக்கிறார். இவர் 21 வயதில் வேலைக்குச் சென்று 25 வயதில் மணம் செய்கிறார். இவர் 55 வயதில் ஓய்வு எடுப்பதாக வைத்துக் கொண்டால் பணிக்காலம் இன்னும் 30 வருடங்கள் உள்ளன. ஒவ்வொரு சம்பள உயர்வுக்கும் சம விகிதாசாரத்தில் செலவும் இருக்கும். ஒரு கணக்குக்காக சம்பளமும் செலவும் அடுத்த 30 வருடங்களுக்கு மாறாது என்று வைத்துக் கொள்வோம். ஆக அவர் அடுத்த 30 வருடத்தில் ரூ. 1.80 கோடி (50,000 x 12 x 30) சம்பாதிப்பார். அதில் 1.44 கோடி ரூபாயை தனது வாழ்க்கை முறையைத் தக்க வைக்க செலவு செய்து செய்தது போக மீதமுள்ள ரூ.36 லட்சம் மட்டுமே சேமிக்கப்படும்.

55 வயதுக்குப் பிறகு வருமானமே இருக்காது அல்லது மிகக் குறைந்த வருமானமே இருக்கும். 15% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி அவரது சேமிப்பு ரூ.10,000 அடுத்த 30 வருடத்தில் 7 கோடி ரூபாய் ஆகியிருக்கும். 12% வருடாந்திர கூட்டு வளர்ச்சி விகிதப்படி கூட ரூ. 3.52 கோடி கிடைக்கும். இது அவரது மொத்த 30 வருட உழைப்பூதியத்தை விட அதிகம். வெறும் 3% அதிக வ.கூ.வ. விகிதம் முதலீட்டை இரட்டிப்பாக்கி விடுகிறது.

நீண்டகால முதலீடு
இந்திய பங்கு சந்தை சென்செக்ஸ் (Sensex) தொடங்கியதிலிருந்து 17% வ.கூ.வ. விகிதம் கொடுத்துள்ளது. உயர் தரமான பரஸ்பர நிதித் திட்டங்கள் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை 20% க்கும் மேலான வளர்ச்சியைக் கொடுத்துள்ளன. உங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நீண்ட கால முதலீட்டில் 15% வ.கூ.வ. விகிதம் கிடைக்கும் என்று நான் எப்போதும் சொல்லி வருகிறேன்.

சாராம்சம்:
தினசரி நாம் செய்கிற வேலையை அடுத்த நாள் எப்படி ச் செய்வது என்று கொஞ்ச நேரம் செலவிட்டால் அதை மிகவும் பயனுள்ளதாக மாற்ற முடியும். இன்று நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் ஒரு முக்கியமான கேள்வி, நீ அலுவலகம் சென்றதுமுதல் வீடு திரும்பும்வரை என்னென்ன வேலைகள் செய்கிறாய் என்பது. இந்தக் கேள்விக்கு பலரும் திணறுவார்கள், நம்மை நாமே கேட்டுக் கொண்டால் நாம் எவ்வளவு நேரத்தை விரயம் செய்கிறோம் என்பது புரியும்.

மெஜாரிட்டி 80%-லிருந்து 20% மைனாரிட்டிக்குச் செல்ல வேண்டுமானால் நாம் அடிப்படை விஷயங்களைக் கடைபிடித்தாலே போதும். இன்று ஒருவரால் 20% சேமிப்பு என்பது மிகவும் சாத்தியமான ஒன்றே. அந்த சேமிப்பையும் ஒரு செலவாக எடுத்துக்கொண்டு மாதா மாதம் ஒரு சிறு தொகையை சேமிக்கத் தொடங்கினாலே நம்மால் பெரிய அளவிற்கு பணம் சேர்க்க முடியும். இந்த 80:20 விதி நம் வாழ்வின் பல்வேறு இடங்களில் நாம் செய்ய மறந்தவைகளை நினைவுபடுத்தும்.

இதை உணர்ந்து நாம் செயல்பட்டால் நம் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அந்த வெற்றி நமக்குதேவையான செல்வங்கள் அனைத்தையும் அள்ளித் தரும்.
padmanaban@fortuneplanners.com